tamilnadu

img

சிட்டி யூனியன் வங்கி ரூ.75,408 கோடிக்கு வர்த்தகம்

மன்னார்குடி, ஜூன் 19- கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் கடந்த நிதியாண்டின் வருடாந்திரக்  கணக்குகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி காமகோடி வெளியிட்டதுடன், வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்தும் தெரிவித்தார்.  வங்கியின் வியாபாரம் கடந்த நிதியாண்டில் 5% உயர்ந்து 75,408 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் வைப்புத் தொகை கடந்த  நிதியாண்டைவிட 6% உயர்ந்து 40,832 கோடி ரூபாயாக உள்ளது.  கடன்கள் கடந்தாண்டை ஒப்பிடும் போது 5% உயர்ந்து 34,576 கோடி ரூபாயாக உள்ளது. 

வங்கியின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டைவிட 13% வளர்ந்து 4,849 கோடியாக உள்ளது. நிகர லாபம் 476 கோடி ரூபாயாகும். நிகர வட்டி வருமானம் 4% வளர்ந்து 1,675 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பு 2018-19 நிதியாண்டில் 4,808 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 5,253 கோடி ரூபாயாக உள்ளது.  வங்கியின் மொத்த வராக்கடன் அளவு 4.09% மாகவும், நிகர வராக் கடன் 2.29ரூ மாகவும் உள்ளது. மூலதன விகிதம் 16.76% ஆகும். கடந்த நிதியாண்டில் 50 கிளைகள் மற்றும் 108 ஏடிஎம்களை புதிதாக நிறுவியுள்ளது. இதனால் தற்போது கிளைகள் எண்ணிக்கை 700 ஆகவும், ஏடிஎம்கள் எண்ணிக்கை 793 எனவும் உள்ளது.  கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பாதுகாப்பாக வீட்டிலிருந்தே பண பரிவர்த்தனை செய்யும் வகையில் சியுபி ஈசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில் ஆர்பிஐ வழிகாட்டுதல்படி சியுபி வங்கியில் நிலையான கடன் பெற்றவர்களின் கடன் தவணை மற்றும் வட்டி செலுத்தும் கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வங்கியின் முதன்மை அதிகாரி  காமகோடி தெரிவித்துள்ளார்.

;